சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவையில் நடக்கும் சுதந்திர தினவிழாவை வீட்டிலிருந்தே காணலாம்! எப்படி?