சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
சிபிசிஐடி சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயரதிகாரி தான் எனவும் கூறினார்.
ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, தனக்கெதிராக சதி செய்யப்பட்டுப் பொய் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி! திகைத்துப் போன வளைகுடா நாடுகள்! - UAE Flood