சென்னை: அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வந்தது. அப்போது, ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்காலக் கோரிக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள மூல வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர்.
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தான் கட்சியிலிருந்து சிலரை நீக்கியதாகவும், அதற்குத் தனக்கு உரிமை உள்ளதாகவும் பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனக்குப் பின்னால் ஏராளமான தொண்டர்கள் உள்ளதால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், தனக்கு எதிராக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காகக் கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென்றே விரும்புவதாகவும், அதற்குத் தொண்டர்களைச் சந்திப்பதற்கான சுதந்திரம் தனக்கு வேண்டுமெனவும் பன்னீர்செல்வம் சார்பில் வாதிடப்பட்டது.
கட்சியின் சின்னம், கொடியைப் பயன்படுத்தத் தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகப் பன்னீர் செல்வம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
பின்னர், எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். அப்போது அவர் இடைக்காலக் கோரிக்கையை நிராகரிக்கும் போது மூல வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறை தான். ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் தன்னை அழைத்துக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைத் தான் எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் அழைத்துக்கொள்ளட்டும் எனவும், எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரியலூரில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - கூலித் தொழிலாளி போக்சோவில் கைது!