சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசால் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த குழுவினர், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தற்காலிக குழுவை அமைத்துள்ளது. அதனால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது” என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுகிறது. இது மோசமான நிலை எனவும், துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக அதிகார அமைப்புக்களுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக, மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படுகிறது என்றும், கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வி குறித்து தான் நீதிமன்றம் கவலை கொள்கிறதே தவிர, அதிகார அமைப்புக்களுக்கு இடையிலான பிரச்சினை பற்றி அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகார அமைப்புக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனக் கூறி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை வழக்கு: சிறை தண்டனைக்கு எதிராக மாஜி டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி! - Ex Special DGP Rajesh Dass Case