சென்னை: ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர்.
இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாபர் சாதிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு ராஜரத்தினம் ஆஜராகி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாகவும், இது சட்ட விரோதம் என்றும் அவர் வாதாடினார். பின்னர், அமலாக்கத்துறை சார்பில், வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கின் விசாரனையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும், வழக்கு தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், ஒருவேளை ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கைது செய்து விட்டால் இந்த மனு காலாவதியாகிவிடும் என ஜாபர் சாதிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில், மனுத்தாக்கல் செய்த போது இருந்த நிலையை மட்டும் கருத்தில் கொண்டு இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்.. ஆனாலும் வெளியே வருவதில் சிக்கல்!