சென்னை: நிலப்பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், பொறியாளரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை எனவும், கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு அளித்த தீர்ப்பில், அரசுத் தரப்பில் குற்றங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. அதனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் உதவித்தொகை: பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - junior lawyers stipend