சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ரவுடி நாகேந்திரன் அவரது மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி தோட்டம் ரவியின் மனைவி மலர்க்கொடிக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக செம்பியம் தனிபடை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு உதவியாக இருந்ததாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகி மகன் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, நடத்திய விசாரணையில், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை என்பவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்து அவரும் கைது செய்யப்பட்டார். கைதான அஞ்சலை மீது ஏற்கனவே புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா.. 2 வது முறையாக ஒத்திவைப்பு!
பின்னர் அஞ்சலையை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஞ்சலையின் மகள் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தனது தாய்க்கும் எந்த வித தொடர்பும் இல்லாத நிலையில், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதனால், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில், ஏ1 எதிரியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனும், ஏ 2 எதிரியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலும், ஏ3 எதிரியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்