மதுரை : உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பணிபுரிந்து வரும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து உத்தரவுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, "கூலிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று( செப் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அந்த காலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மிகவும் பயப்பட்டனர். ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டித்தனர். ஆனால், தற்போது மாணவர்களை சிறிது கண்டித்தாலே, மாணவர்கள் தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெற்றோர்களும், மாணவர்களை கடுமையாக கண்டிக்கக்கூடாது என வலியுறுத்துகின்றனர். கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.
இதையும் படிங்க : இளம் தலைமுறையை பாதிக்கும் “கூலிப்” போதைப்பொருள் எப்படி பாதுகாப்பானது? - ஐகோர்ட் அதிரடி கேள்வி!
தமிழக அரசு சார்பில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என சட்டங்களை இயற்றி கடுமையாக கண்காணித்து வருகிறோம். எனவே, புகையிலை பொருட்கள் தடை குறித்த மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளார். எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் கோரினார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "முதலில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்.
அடுத்ததாக நாடு முழுவதும் குட்கா, கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, கூலிப் உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்ளுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை நியமிக்க வேண்டும்.
புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக, மத்திய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.