சென்னை: சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது, தர்பூசணி, கிர்ணி பழம் மற்றும் மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
மஞ்சள் காய்ச்சல்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கோடை காலத்தில் தண்ணீர், இளநீர், தர்பூசணி, கிர்ணிபழம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அப்போது தான் விமான நிலையத்தில் அந்த நாடுகளுக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் போதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
கிங்ஸ் இன்ஸ்டிடியூட்: அதேபோல, தனியார் மருத்துவமனைகளிலும் வேக்சினேஷன் போடப்பட்டு, அந்தச் சான்றிதழை வைத்து அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால், இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால், தனியார் மருத்துவமனையில் மஞ்சள் வேக்சினேஷன் போடும்போது அதை விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை.
கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல, துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இருக்கக்கூடிய மையத்திலும் மஞ்சள் வேக்சினேஷன் போடப்படுகிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் இந்த வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த இடங்களில் வேக்சினேஷன் போட்டுக்கொள்ளவும்” என அவர் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல்: மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த காலங்களில் போல் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மிகப்பெரிய கட்டுப்பாட்டில் இருக்கிறது. காய்ச்சல் வரும் பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிலே சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்” என கூறினார்.
12ஆம் பொதுத்தேர்வு: தொடர்ந்து பேசிய அமைச்சர், “பன்னிரெண்டாம் வகுப்பில் இந்த ஆண்டு 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேரில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள் 51 ஆயிரத்து 919 பேர் மாணவர்கள். இதில் மாணவர்கள் 32,164 பேரும், மாணவிகள் 19 ஆயிரத்து 755 தேர்ச்சி பெற தவறி இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
மேலும், இதற்கு 104 என்ற எண்ணின் மூலம் மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். இந்த தேர்வுக்குப் பிறகு மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆலோசனைகள் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 2021இல் இருந்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் 51 ஆயிரத்து 919 மாணவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 137 பேர் வருத்தத்தில் இருப்பதாகவும், மன உளைச்சலில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களை தொடர்ச்சியாக துறையின் சார்பில் மனநல ஆலோசகர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படும் மூன்று மையங்கள் இவைதான்