சென்னை: சென்னையிலிருந்து ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்க் பார்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது. நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னை வரும் இந்த விமானம், மீண்டும் அதிகாலை 1.50 மணிக்கு பிராங் பார்ட் நகருக்கு புறப்பட்டுச் செல்லும்.
சென்னையிலிருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மன் செல்லும் பயணிகள், இந்த விமானத்தைப் பயன்படுத்துவதால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணிப்பர்.
இந்த நிலையில், ஜெர்மன் நாட்டில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
இதனால், நேற்று மாலை பிராங்க் பார்ட் நகரிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய பயணிகள் விமானமும், சென்னையிலிருந்து இன்று (பிப்.8) அதிகாலை 1.50 மணிக்கு பிராங்க் பார்ட் நகருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் ரத்து குறித்து, அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்த விமான நிறுவனம் தகவல் தெரிவித்துவிட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை. ஆனாலும், தகவல் கிடைக்காத பயணிகள், சென்னை விமான நிலையத்திற்கு வந்து தகவல் அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் வரிப் பகிர்வு; புள்ளி விவரங்களுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எம்பி வில்சன்!