தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது பெண்ணும், அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப் (20) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்ற ரீதியில், இரு வீட்டாரும் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (பிப்.23) காலை அக்கிராமத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில், அந்த 16 வயது பெண் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அதேபோல், காதலன் திலீப்பும், அருகேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது அக்கிராமத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், இரு குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து இருவரது உடல்களையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், 16 வயது பெண் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அதைச் செய்தது காதலன் திலீப்தானா அல்லது வேறு யாரேனுமா என்ற கோணத்திலும், திலீப் தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தற்கொலை போன்று மாற்றியுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவர் தலைமறைவு!