சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் துறைமுகங்களில் 125 ஆண்டுகள் பழமையான துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் இங்கு கண்டெய்னர்கள் கொண்டு வரப்பட்டு கையாளப்பட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் ''சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்'' மற்றும் ''டிபி வேர்ல்ட்'' என 2 யார்டுகளில் கண்டெய்னர்கள் கையாளப்பட்டு வருகிறது.
'முறையாக இயக்கப்படாத கிரேன்கள்': கடந்த சில தினங்களாக துறைமுகத்தில் இயங்கி வரும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் யார்டில் கண்டெய்னர்களை கையாளும் கிரேன்கள் இயக்குவதில் ஏற்பட்ட சிரமத்தால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 ஆம் தேதி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கி செல்லும் கல்மார் எனப்படும் ராட்சஷ வாகனம் கண்டெய்னரை தூக்கி சென்றபோது, முறையாக இயக்கப்படாததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதேபோல் நேற்று (26.09.2024) கண்டெய்னர் உயரமாக அடுக்கி வைக்க பயன்படுத்தப்படும் கிரேனை ஆப்பரேட்டர் முறையாக இயக்காததால், 40 அடி கண்டெய்னர் உயரத்தில் தொங்கியபடி இருந்து விபத்துக்குள்ளானது.
லாரி ஓட்டுநர்கள் அச்சம்: இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்த லாரி ஓட்டுநர் வேலுகுகன் கூறுகையில், '' நான் பலமுறை சென்னை துறைமுக யார்டிற்கு லாரியில் கண்டெய்னரை ஏற்றி வந்துள்ளேன். ஆனால், தற்போது இந்த யார்டிற்குள் செல்லலாமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கண்டெய்னர்கள் கையாளும் கிரேன் ஆப்பரேட்டர்கள் யாருக்கும் முறையான பயிற்சி இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை இன்டெர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோல் எண்ணூரில் உள்ள காமராஜ் துறைமுகத்தில் கவன குறைவாக கிரேன் இயக்கப்பட்டதால், கண்டெய்னர் லாரி மீது விழுந்து நாகராஜ் என்பவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் கொள்ளை.. தமிழ்நாட்டில் என்கவுண்டர்.. நாமக்கல் சேசிங் சம்பவ பின்னணி!
சென்னை துறைமுகத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதால் உயிர் பயத்தாலும், குடும்பத்தை காப்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தாலும் லாரி ஓட்டும் தொழிலை விட்டு செல்ல பல லாரி ஓட்டுநர்கள் முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் சுரேஷ்பாபு கூறுகையில், சென்னை துறைமுகத்தில் உள்ள சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான யார்டில் முறையாக பயிற்சியளிக்காமல், பயிற்சிக்கு வரும் ஆப்பரேட்டர்களை வைத்து கிரேன்களை இயக்கி வருகின்றனர்.
குறிப்பிட்ட யார்டில் விபத்துகள்: இதனால் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து இந்த யார்டில் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஒரு வாரத்தில் மட்டும் முறையாக பயிற்சியிள்ளாத ஆப்பரேட்டர்கள் கிரேன் மற்றும் கல்மார் இயந்திரத்தை இயக்கியதால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் லாரி ஓட்டுநர்கள் பணிக்கு வர தயங்குவதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்க வேண்டிய ஆப்பரேட்டர்களுக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து பயிற்சி இல்லாதவர்களை வைத்து கிரேன்களை நிறுவனத்தினர் இயக்கி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கேட்டபோது, '' கிரேன்களை இயக்க நாங்கள் போதுமான பயிற்சி அளித்த பின்னர் தான் ஆப்பரேட்டர்களை இயக்க அனுமதிக்கிறோம். கண்டெய்னர் யார்டில் இதுபோன்ற சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது இயற்கையான ஒன்று தான் எனவும், கடந்த 2 நாட்களில் விபத்து ஏற்பட்டுள்ளது என கூறுவது தவறான தகவல் எனவும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் பெறப்பட்டவில்லை எனவும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை துறைமுக யார்டில் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு லாரி ஓட்டுநர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும் உயிரிழப்பு சேதம் ஏற்படுவதற்கு முன்பு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்