ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விக்கி (எ) விக்னேஷ் (31). லாரி டிரைவரான விக்னேஷ், கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இவர் லாரி டிரைவர் என்பதால் வேலைக்காக சென்று விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் தேடாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பல நாட்களாகியும் விக்னேஷ் வீட்டிற்கு வராததால், அவரது தந்தை நாகராஜ் கடந்த மார்ச் 13ஆம் தேதி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகனைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விக்னேஷை தீவிரமாக தேடி வந்தனர்.
காணாமல் போன விக்னேஷ் மீது ஏற்கனவே ஆடு திருட்டு வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சத்தியமங்கலம் காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, காவல்துறையின் ரவுடி பட்டியலிலும் விக்னேஷ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காணாமல் போன விக்னேஷை போலீசார் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது நண்பர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு எஸ்.பி உத்தரவின் பேரில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ-கள் பரமேஸ்வரன், மேனகா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
இந்த நிலையில், விக்னேஷை கொலை செய்ததாக சத்தி வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மச்சக்கெண்டை (எ) சசிக்குமார் (35), சத்தியமங்கலம் வி.ஏ.ஒ விடம் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார் சசிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், விக்னேஷிற்கும், தனக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக, சிலருடன் சேர்ந்து காசிக்காடு செல்லும் வழியில் விக்னேஷை அடித்து கொலை செய்து, அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் குழி தோண்டி புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 19) சத்தியமங்கலம் தாசில்தார் மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், விக்னேஷின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடலை சசிக்குமார் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நந்தகுமார் மற்றும் மருத்துவ குழுவினர் உடற்கூராய்வு செய்தனர்.
பின்னர் உடல், குமாரபாளையம் பிரிவில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, சத்தியமங்கலம் போலீசார் சசிக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய நபர்களைப் பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசாரணை கைதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு; எஸ்.பி.பட்டினம் எஸ்ஐ-க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!