ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசி வனப்பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் சிவன் பார்வதி தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற திருக்கல்யாணத்தைக் கண்டு களிக்கச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். விழாவையொட்டி, யாக குண்டம் வார்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓதினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சிவன் பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடத்தி தீபாராதனை காட்டினர்.
இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அருள் வந்து ஆடிய காட்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது திடீரென மேளதாளங்கள் இசைக்கேற்ப பக்தர் ஒருவர் தனது தலையில் ருத்திராட்சங்களால் ஆன லிங்கத்தைத் தலையில் சுமந்தபடி ஆடினார்.இதைத்தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிவனடியார்கள் திருவாசக பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து 1 கோடி சிவலிங்கம் வைக்க, தினந்தோறும் பக்தர்கள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து நேர்த்திக்கடன் செலுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் திருப்பணிக் குழு தலைவர் கருப்புசாமி தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆலயத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி 14 டன் எடை கொண்ட 18 அடி உயரச் சிவலிங்கம், சிறப்புப் பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?