சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்குமாறு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்ட நீதிமன்றம் ராஜேஷ் தாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சிபிசிஐடி போலீசார் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் தண்டனை விதித்த பின்பும், ஏன் ராஜேஷ் தாஸை கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே தையூர் பகுதியில் உள்ள ராஜேஷ் தாஸ் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜேஷ் தாஸ் இல்லத்தில் இல்லை என்பதும் அவர் தலைமறைவாகி விட்டதும் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்குத் தப்பிச் செல்லாத வகையில் சிபிசிஐடி போலீசாரால் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வரும் நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அத்துமீறல்; அந்தரங்களைக் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் மீது பெண் புகார்!