சென்னை: இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் 18வது நாடாளுமன்றத் தேர்தலில், 21 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள திமுகவின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
அதில் ஏற்கனவே எம்.பி-களாக உள்ள 6 பேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, 11 புதிய முகங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இதில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், கவுண்டர் மற்றும் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த தலா 3 பேருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜெகத்ரட்சகன், செல்வகணபதி, கதிர் ஆனந்த், ஆரணி தரணிவேந்தன், தருமபுரி ஆ.மணி உள்ளிட்ட 5 வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தங்க தமிழ்செல்வன், தஞ்சாவூர் ச.முரசொலி உள்ளிட்ட நான்கு முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக கோவை ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, ஈரோடு பிரகாஷ் உள்ளிட்ட மூன்று வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஆ.ராசா, காஞ்சிபுரம் செல்வம், தென்காசி ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்ட மூன்று ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும், கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியும், இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை தொகுதியும், முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாதுரைக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியும், உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த மலையரசனுக்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியும், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த கலாநிதி வீராசாமிக்கு வடசென்னை தொகுதியும், ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த அருண் நேருவிற்கு பெரம்பலூர் தொகுதி வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்