விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 14 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி, தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் அன்று தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 14ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 23 பணி நாள் எனவும் அறிவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதது வழக்கம். இதனையடுத்து, இவ்விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்: உலகப் பிரசித்தி பெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழா மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் நடைபெறும் தேர்த்திருவிழாயை அடுத்து மயானக்கொள்ளை மார்ச் 9ம் தேதியும், தீமிதி விழா 12ஆம் தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் 14ஆம் தேதியும் நடக்க உள்ளது.
இதையும் படிங்க: உலக முதலீட்டாளர் மாநாடு 2024; டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு!