திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், எண்ணக்குடி கிராமத்தில், சித்திரபட்டன் வீரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி அன்று காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு கிடா வெட்டி ஊருக்கே கறி விருந்து வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த வருட சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று (ஏப்ரல் 20) இரவு ஊர் நாட்டாண்மை அன்பழகன் முன்னிலையில், கோயில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, கோயில் திருவிழாவிற்காக ஒரு வீட்டிற்கு ரூபாய் 1,000 வரி செலுத்த வேண்டும் என ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட நிலையில், அதனை யார் யார் கொடுத்தார்கள் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, அதே பகுதியில் உள்ள கோழி முட்டை என்ற சந்திரசேகர் (58) என்பவர் வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவர் மீது பேரளம் காவல் நிலையத்தில் தொடர் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டதால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாராய வியாபாரி சந்திரசேகரன் மது போதையில் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளார். இவர் கோயில் திருவிழாவிற்கு வரிப் பணம் கொடுக்கவில்லை என முன்னாள் நாட்டாண்மை விஜயராகவன் கூறியுள்ளார். இதன் காரணமாக சந்திரசேகருக்கும், விஜயராகவனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜயராகவன் ஓடி வந்து கோழி சந்திரசேகரனைத் தாக்கியுள்ளார். இதில் கோழி சந்திரசேகர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, பேரளம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், மயக்கம் அடைந்த சந்திரசேகரனை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஊர் முன்னாள் நாட்டாண்மை விஜயராகவனை பேரளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. எப்படி விண்ணப்பிப்பது? - Free Admission In Private Schools