புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்த பிறகு வீதி வீதியாகச் சென்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாகத் தெரிகிறது. 10 ஆண்டுக் காலம் ஆட்சியிலிருந்த மோடி கச்சத்தீவு குறித்து மறந்துவிட்டு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், அண்ணாமலை கூறுவது போன்று முன்னால் முதலமைச்சர் கருணாநிதி கச்சத்தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. அவர் ஒரு ராஜதந்திரி இந்த பிரச்சனையை இரண்டு வருட காலம் ஒத்திப் போட முடியுமா என்று தான் கேட்டாரே தவிர ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை.
கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்குத்தான் சொந்தம். அவருடைய வாரிசுகள் இதுவரை எந்தவிதமான சொந்தமும் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னரின் வாரிசு வழக்கு தொடர்ந்து கச்சத்தீவு தனக்குத்தான் சொந்தம் என்று கூறுவதற்குச் சட்டத்தில் இடம் உண்டு.
இந்த பிரச்சனை இரு நாட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை. விரைவில் தமிழக அரசு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு உள்நுழையவும் கச்சத்தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.
இந்தியா, இலங்கை உறவு ஒரு ரகசிய உறவு அந்த உறவை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. இதனால் தான் மீனவர்களும், இலங்கைத் தமிழர்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் துரை வைகோ, "கடந்த 10 ஆண்டுகளாக பாஜக கச்சத்தீவை மீட்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்படுவது அதிகரித்து உள்ளதே தவிரக் குறையவில்லை. பத்தாண்டுகளாக எதுவும் செய்யாமல் தற்போது கச்சத்தீவு குறித்துப் பேசுவது மலிவான அரசியல்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. தபால் வாக்குகளை பெறும் பணிகள் தீவிரம்!