சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விதிகளை வகுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக ஃபைல்ஸ் எனக் கூறி, தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான போது, 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் ஆஜராகியதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகும் போது, அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கும்படி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும்," என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "எந்த ஒரு வழக்கின் விசாரணை நடைபெறும்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது ஒரு வழக்கில் இத்தனை வழக்கறிஞர்கள்தான் ஆஜரா வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது,"என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்