மதுரை: பரமக்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அண்மைக்காலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார். திமுக அரசு விசாரணை நடப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு சேலம் மாநகரத்தில் முன்னாள் மண்டல குழு தலைவர் சண்முகம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கின்ற சூழ்நிலையை தான் பார்க்கிறோம்.
சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்று விட்டது. மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது நாட்டு மக்களுக்குத் தெரிகிறது. காவல்துறையைக் கண்டு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை. சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது. கசாப்பு கடையில் ஆட்டை வெட்டுவதைப் போல் ரவுடிகள் வெட்டி சாய்ப்பதை நாம் பார்க்கிறோம்" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எங்கள் தலைமை முடிவு தான். ஜெயலலிதா இருக்கும்போது ஐந்து இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம். கருணாநிதியும் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பது நாடறிந்தது. 30க்கும் மேற்பட்ட இடத்தில் வாக்காளரை அழைத்துச் சென்று பட்டியில் அடைத்து வைத்தார்கள். ஜனநாயகப் படுகொலை அரங்கேறியது. விக்கிரவாண்டியின் ஒரு வீட்டில் இருந்து வேஷ்டி சட்டைகள் எல்லாம் பொது சாலையில் போடுகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயகம் செத்துவிடும். அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு பண மழை பொழிவார்கள். திமுக ஆட்சியில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது, அதனால் தான் தேர்தலை புறக்கணித்தோம். தேர்தலில் அதிமுக தொண்டர்கள் வாக்கு செலுத்துவது தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் தொடர்ந்து பட்டியலின மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!