சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விஜய் கட்சியை ஆரம்பித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விஜய் தலைமையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவித்தார்.
இந்நிலையில், விஜய் கட்சியின் கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 22ஆம் தேதியான நாளை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கவுள்ளது. இதற்காக 45 அடி உயரத்தில் தனியாக கொடிக் கம்பமும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடிக் கம்பத்தில் ஏற்றித் தான் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இந்த விழாவுக்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் கொடியேற்றி ஒத்திகை பார்த்திருந்தார். அந்த கொடி தான் கட்சி கொடியா அல்லது வேறு கொடியை அறிமுகம் செய்வார்களா என நாளை தெரிய வரும். இந்நிலையில், நாளை கட்சி கொடி அறிமுக விழா தொடர்பாக ஈடிவி பாரத் செய்திக்கு பேசிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி, “கொடி அறிமுக நிகழ்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகள் அனைவரும் காலை 7 மணிக்குள் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், காலை 11 மணிக்கு கொடி அறிமுகப்படுத்தப்படும் என கட்சித் தலைமையிடம் இருந்து தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கொடியேற்றும் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு செல்போன் அனுமதி இல்லை எனவும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “விஜயின் அரசியலுக்கு திமுக பல நெருக்கடிகள் கொடுக்கிறது” - முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!