தமிழ்நாடு: தருமபுரி, விருதுநகர், வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான, நீட் தேர்வு இன்று (மே 5) நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
அந்த வகையில், மதியம் 2:00 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5:20 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் காலை 11:30 மணியிலிருந்து பகல் 1:30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், காலை 9 மணி முதல் தேர்வு மையத்தின் முன்பு குவியத் தொடங்கினர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் மொத்தம் 5 ஆயிரத்து 758 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
முன்னதாக மாணவர்கள் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு, வாட்டர் பாட்டில், போட்டோ உள்ளிட்டவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளிட்ட எந்த கயிறும் இருக்கக் கூடாது, மாணவ மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வர அனுமதி இல்லை, முழு கை சட்டை அணியக்கூடாது, காதில் தோடு அணியக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டன.
ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது என்ற நடைமுறை தெரியாததால், 30 முதல் 50 கிலோமீட்டர் பயணம் செய்து தேர்வெழுத வந்த மாணவர்கள் அவசர அவசரமாக அருகில் இருந்த கடைகளுக்குச் சென்று மாற்று உடை வாங்கி அணிந்து, தேர்வு மையத்திற்கு வந்தனர். மேலும், மாணவா்களை மெடல் டிடக்டா் கொண்டு சோதனை செய்து அனுப்பினர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் மொத்தம் 3,462 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிக் கொண்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் காவல்துறையினர் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவாட்டத்தில் 379 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 433 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல, வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் 5 ஆயிரத்து 266 மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் நிலையில், முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “காட்பாடி ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காட்பாடி மற்றும் குடியாத்தத்திலிருந்து தேர்வு கூடங்களுக்கு காலை 11 மணிக்குள் மாணவர்கள் செல்லத் தேவையான பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது” என கூறினார்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 23 மையங்களில் 11 ஆயிரத்து 144 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அப்பகுதியில் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து ஏற்பாடு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பின்னர் மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு தொடக்கம்: விழுப்புரத்தில் 5,008 பேர் எழுதுகின்றனர்! - Neet Exam