திருச்சி: மணப்பாறை அடுத்த வ.கைகாட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினரிடம் பறிகொடுத்த பணத்தை உரிய ஆவணங்களை எடுத்து வந்து திரும்பக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை எடுத்துக் கூறிய மணப்பாறை வட்டாட்சியர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வாக்குகளுக்காக பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கன்னிவடுகப்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.68,000 ரொக்கப் பணம் இருந்ததை கண்டறிந்த பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1,77,300 பணத்தை சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தங்களது பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்து விட்டு இப்பணத்தை மணப்பாறை வட்டாட்சியரிடம் வந்து பெற்றுக் கொள்ளும்படி இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, உரிய ஆவணங்களோடு மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் வந்த தங்கபாண்டியன் என்பவர் தான் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதற்காக வைத்துள்ள பணம் என்றும் இந்த பணம் நகையை அடகு வைத்து வாங்கி வந்ததாகவும் அதற்கான ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்பக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதேபோல் சென்னையைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் தனது வேலையாட்களுக்கு பணம் எனக் கூறி, பணத்தைத் திரும்ப தருமாறு கேட்டார். அதற்கு வட்டாட்சியர் தனலட்சுமி எடுத்துச் செல்லப்படும் பணத்திற்குரிய ஆவணங்களை தேர்தல் பறக்கும்படையினரிடம் காண்பித்து இருந்தால் அவர்கள் பணத்தை பறிமுதல் செய்திருக்க மாட்டார்கள் எனவும், தற்போது அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்துவிட்டனர். ஆகவே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்து பணத்தைப் பறி கொடுத்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், நாடு முழுவதும் இதுதான் நடைமுறை என வட்டாட்சியர் தெரிவித்த பின்னர் புலம்பியவாறே அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: திருச்சி மணப்பாறை அருகே ரூ.38 லட்சம் பறிமுதல்! - LOK SABHA ELECTION 2024