தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (35). இவர் குள்ளப்பகவுண்டன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மே 15ஆம் தேதி தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றபோது, அருகிலுள்ள பரிமளா என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோதமாக தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் இறந்த கிருஷ்ணகுமாருக்கு நீதி வேண்டும் என கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனையின் பிரேத அறையின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 நாட்கள் ஆகியும், இதுவரை குற்றவாளியைக் கைது செய்யாமல் உள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
அதேபோல், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனவும், அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்! - Southwest Monsoon