அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது கணவர் கார்த்திகேயன் இறந்து விட்ட நிலையில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். ராஜாமணி இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ராஜாமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட பாரதிராஜா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த ராஜாமணி பாரதிராஜாவுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பாரதிராஜா, ராஜாமணி வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் அனுப்பி விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜாமணி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாரதிராஜாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.