தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தி, 1,800 ஆவர்த்தன வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (பிப்.29) வழிபாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், “உலக நாடுகளில் இந்தியா விண்வெளித் துறையில் சரித்திரம் படைத்து வருவகிறது. தென் தமிழ்நாட்டை தொழில்துறையில் ஊக்குவிக்கும் வகையில், குலசேரன்பட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 11 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சாலை வசதி, விமான வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பிரதமரின் வருகை தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பிரதமரின் மீது மிகப்பெரிய அன்பை வைத்திருக்கிறார்கள். பாஜக சார்பில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்தி, 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தோம். அதேபோல, என் மண் என் மக்கள் யாத்திரை பலனாக பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் செல்வார்கள். பாஜக தமிழகத்தில் வீரனாகவும், தளபதியாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள் பாஜகவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பிரதமர் மோடி நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில், உள்நோக்கம் எதுவும் இல்லை. வரக்கூடிய தேர்தல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் தேர்தலாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி தேசிய தலைமை பேசி வருகிறது. தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள், 11 அமைச்சர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. முதலில் அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர் பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இருநாடுகளும் கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகவும், காங்கிரசும்தான். ஆழ்கடல் மீன்பிடித்தொழிலை ஊக்குவிப்பதற்கு 60 சதவீதம் மானியம் கொடுத்து வருகிறோம். மீனவர்களை ஊக்கப்படுத்த 38,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். தமிழ்நாட்டு மீன்வளத் துறைக்கு மட்டும் 1,800 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பிரதமர் மோடி கலந்து கொண்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிகழ்ச்சிக்கு நாளிதழில் திமுகவினர் கொடுத்த விளம்பரம் குறித்த கேள்விக்கு, “இந்தியாவின் ராக்கெட் தளம் பாரத தேசத்தின் புகழை மட்டுமே கூற வேண்டும். திமுகவினர் சீன ராக்கெட்டை வைத்து நாளிதழில் விளம்பரம் செய்தது தேச விரோத செயல். இதற்காக திமுகவினர் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; 11வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்