கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன் கூறுகையில், “மருத்துவர் கொலை விவகாரத்தில் மேற்கு வங்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது" என்றார்.
பின் தருவைகுளம் மீனவர்கள் கைது குறித்து பேசிய அவர், “இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடல் சீற்றம், புயல் தட்பவெப்பநிலை மாறுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் மீனவர்கள் எல்லை தாண்டும்போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யும் நிலை இருந்து வருகிறது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, நமது மீனவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருகிறது, படகுகளையும் மீட்டு வந்து உள்ளோம். மீனவர் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறோம்” என்றார்.
மேலும், நடிகர் விஜயின் கட்சிக் கொடி அறிமுகம் குறித்த கேள்விக்கு, “நமது நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். பொதுமக்களுக்கு சேவை செய்யலாம். கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம்,
தற்போது தான் கொடியை அறிமுகம் செய்து உள்ளார். என்ன மாற்றம் ஏற்படும் என்பதை இப்போது நான் ஜோசியம் சொல்ல முடியாது.
ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை உள்ளது, கோட்பாடுகள் உள்ளது. அந்த வகையில். விஜய், அண்ணாதுரை, எம்ஜிஆர் படங்களை வைத்து உள்ளார். ஒருங்கிணைந்த ஒரு அரசியலை முன்னெடுப்போம் என்று விஜய் கூறி உள்ளார். எல்லாருமே அதே அரசியல்தான் முன் வைக்கிறோம்” என கூறினார்.
மேலும், சென்னை ராமாபுரத்தில் தனியார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நடிகர் விஜயின் கட்சிக் கொடி அறிமுகம் குறித்து பேசியபோது, “நாட்டில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. அதுபோலதான் நடிகர் விஜயும் கட்சி தொடங்கி இருக்கிறார். திமுக வளர்ந்த கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய கட்சி. எனவே, விஜய் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை" என தெரிவித்தார்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: த.வெ.க. கொடியில் யானை சின்னம்; விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்!