தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள், திருமங்கலக்குடி, சூரியனார்கோயில், கட்டா நகரம், மணிக்குடி உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சம்மந்தப்பட்ட நிலையங்களில் இருந்து அரவை மில்லிற்கோ அல்லது பாதுகாப்பான கிடங்கிற்கோ அனுப்பி வைக்கப்படாமல், திறந்த வெளி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது எப்போது வேண்டுமானாலும் மழை வரும் சூழல் நிலை உள்ளதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நெல் மூட்டைகளை உடனடியாக அந்தந்த கொள்முதல் நிலையங்களில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இவற்றை அரவை மில்லிற்கோ அல்லது பாதுகாப்பான கிடங்கிற்கோ அனுப்பி வைத்தால் தான் அறுவடை செய்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் போடவும், பாதுகாப்பாக வைக்கவும் முடியும். ஆகவே கொள்முதல் செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் வாணிப கழகமும் தக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் வாணிப கழகமும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து தமிழக அரசிற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாயி ராஜா கூறுகையில், “திருப்பனந்தாள், திருமங்கலக்குடி, மணிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் திருமங்கலக்குடி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.
கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 7 ஆயிரம், 8 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் நெல் அறுவடை செய்யாமல் உள்ளனர். அப்படியே நெல் அறுவடை செய்தாலும், அவற்றை கொட்டுவதற்கு களம் இல்லை. மழை வந்தால் நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாகிவிடும். ஆகவே இந்த நெல் மூட்டைகளை அரசு கிடங்கிற்கு எடுத்து செல்ல வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தஞ்சை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு.. அதிமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி! - Thanjavur Mayor Ramanathan