தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்து. இதனையடுத்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 14 பேர் குழுவாகத் தனிப்பட்ட முறையில் காரைக்காலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்குச் சென்ற மாணவர்கள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டு இருந்த போது ஹேமமாலினி என்ற மாணவி எதிர்பாராதவிதமாகக் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்களான அபிலேஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரும் ஹேமமாலினியை காப்பாற்றும் நோக்கில் கடலுக்குள் சென்ற போது, அவர்களும் கடல் அலையில் சிக்கி மாயமானார்கள்.
இதற்கிடையே ஹேமமாலி மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடலோர காவல் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் படையினர் மாயமான இரண்டு மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சப்மபவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த ஹேமமாலினி, கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் என்றும் அவரது தந்தை சுந்தரேசன் என்றும் தெரியவந்துள்ளது. அதே போன்று கடலில் மாயமான மாணவர் அபிலேஷ், திருவாரூர் மாவட்டம் வடமட்டம் கிராமம் தெற்கு வீதியைச் சேர்ந்த அஜெய்குமார் என்பவரது மகன் ஆவார். மற்றொரு மாணவரான ஜெகதீஷ்வரன், கும்பகோணம் அருகேயுள்ள வளையப்பேட்டை அக்ரஹாரம் நேதாஜி நகரைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும், தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு உலகைச் சுருட்டிய சுனாமி பேரலைக்குப் பிறகு, கடலின் சீற்றம் முற்றிலும் மாறியுள்ளது, இதன் காரணமாக, கடற்கரையில் குளிப்பது ஆபத்தானது எனக் காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளது.
ஆனால் அதனை அலட்சியப்படுத்தி விட்டு, சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலர் செய்யும் செயல்களால், உயிரிழப்புகள் போன்ற மிகப்பெரிய பாதிப்புகளை அது ஏற்படுத்தி விடுகிறது. மேலும் அவர்களது குடும்பத்தினரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி அவர்களை நிலை குலையச் செய்து விடுகின்றனர். சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் வாழை, கொய்யா பயிர்களை சேதப்படுத்திய குரங்குகள்.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!