தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா பண்டிகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்நிலையில், முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா..திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இந்நிலையில், சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் முத்தாரம்மன் தசரா குழு சார்பில், நவராத்திரியை முன்னிட்டு தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னை முத்தாரம்மன், சுடலை உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து, கோயில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். மேலும், திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்