தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹார நிகழ்ச்சி நாளை 12ஆம் தேதி நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
சூரசம்ஹார சிறப்பு பூஜைகள்: நாளை (அக்.12) காலை 6 மணி, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 10:30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி குலசை கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
11ஆம் திருநாளான அக்.13ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்ததுடன் கடற்கரை மேடையில் சிறப்பு பூஜை, அதிகாலை 2 மணிக்கு கோபம் தனிய அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலில் சாந்தாபிஷேக ஆராதனை, அதிகாலை 5 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனை, காலை 6 மணிக்கு அம்மன் பூ சப்பரத்தில் திருவீதி உலா, மாலை 5 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தல் நடைபெற உள்ளது. பின்னர், காப்பு கட்டிய பக்தர்கள் காப்பு கலைந்து விரதம் முறிப்பார்கள்.
இதையும் படிங்க: குலசை தசரா: கேட்ட வரம் அருளும் முத்தாரம்மன்.. விரத முறைகளும் வேடங்களின் பலன்களும் குறித்த சிறப்பு தொகுப்பு!
அக். 14ஆம் தேதி 12ஆம் திருவிழாவில் காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சுமார் 400க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி ஊர், ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரத்தை சேர்ந்த 'பத்திரகாளி தசரா குழுவினர்' சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20க்கும் மேற்பட்டோர், அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப குறவன், குறத்தி, சிவன், கிழவி, யாசகர், அம்மன், சுடுகாட்டு காளி, அட்டை காளி, மயான காளி என பல்வேறு வேடங்களை அணிந்து, மேள, தாளங்கள் முழங்க அம்மனுக்கு பூஜை செய்து விட்டு அங்கிருந்து வீடு, வீடாக சென்று தர்மம் எடுக்க ஆயத்தமானார்கள்.
அப்போது அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர், பல்வேறு சாமிகளின் வேடம் அணிந்து வந்த பக்தர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதுகுறித்து வெளிநாட்டவர் ஜான் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “நான் முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு வந்துள்ளேன். இந்த திருவிழாவில் கலந்துக்கொண்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இத்திருவிழாவில் அம்மன் வேடமணிந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். அவர்களது கடின உழைப்பே இந்த தசரா திருவிழாவின் அழகாகும். இவர்கள் அவர்களது வரலாறு மற்றும் கலச்சாரத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். தமிழக கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இத்திருவிழா உள்ளது. எனக்கு, இந்த நாள் மிகவும் சிறப்பானதாகும். இவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று அமெரிக்கரான ஜான் பூரிப்புடன் தெரிவித்தார்.