சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 5 தலைமுறைகளாக அங்கு பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களை அங்கு கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருகிறார்கள். மாஞ்சோலை தோட்டத்தில் பணிபுரியக்கூடிய 18 தொழிலாளர்கள் இங்கு வந்து உள்ளனர். மாஞ்சோலை மலைப் பகுதிகள் அன்றைய காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கட்டுபாட்டில் இருந்தது, பின்னர் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் ஒப்படைக்கபட்டது.
பின்னர், அவரிடம் இருந்து 99 வருட குத்தகைக்கு பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. அதன் பணிகளுக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு தேயிலை தோட்டத்தை உருவாக்க பலர் அங்கு உயிர் தியாகம் செய்து உள்ளார்கள்.
இந்நிலையில், 2028ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், மாஞ்சோலையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளில் உள்ள தொழிலாளிகளை அழைத்துப் பேசி மற்றும் மிரட்டி கையொப்பமிட்டு விருப்ப ஓய்வு பெறு வற்புறுத்தி, பல தலைமுறைகளாக பணியாற்றி வரும் தொழிலாளிகளை காலி செய்து வருகின்றனர்.
வனமிருகம் பாதுகாப்புச் சட்டப்படி அங்கு இருக்கும் தொழிலாளிகள் அந்த தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது என்றாலும், 1975ஆம் ஆண்டு ஏன் பிபிடிசி நிறுவனம் அந்த இடத்தில் இருந்து வெளியேற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அங்குள்ள தொழிலாளர்கள் விருப்பப்பட்டு கையெழுத்திடவில்லை. இது சட்டப்படி நியாயமற்றது, அரசு அங்கு என்ன செய்தாலும் அங்கு இருக்கக்கூடிய மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற BBTC-க்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது.
தமிழக அரசு அங்கு இருக்கக்கூடிய மக்களை வாழ வைக்காமல், அவர்களை அங்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நோக்கில் செயல்படுகிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. அரசு ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக நீதி பேசுவதில் மட்டும் இல்லாமல் அதனை அமல்படுத்த வேண்டும்.
மாஞ்சோலையில் இருக்கக்கூடிய மக்களை வெளியேற்றினால், அவர்கள் தற்கொலை செய்யக்கூடிய நிலைக்கு தான் தள்ளப்படுவார்கள், இந்த சூழ்நிலையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது. மேலும், 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனி: ஸ்டாலின் அதன் மேனேஜர்” - செல்லூர் ராஜூ விமர்சனம்!