கிருஷ்ணகிரி: தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று முடிந்தது. இதில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை கிராமத்திற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவரின் மகன் மகேஸ்வரன் (18) தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் மாநாடு நடைபெறும் நாளன்று தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த 25 நபர்களுடன் இணைந்து வேனில் மாநாட்டு திடலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்புகையில் கூட்ட நெரிசலில் சிக்கிக் காணாமல் போனார்.
கையில் செல்போன் மற்றும் பணம் எதுவும் கொண்டு செல்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட மகேஸ்வரன், ஒரு வழியாக இன்று மாலை 6 மணியளவில் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார். மகேஸ்வரனை பார்த்ததும் அவரது தாய் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றார்.
இது குறித்து வீடு திரும்பிய மாணவன் மகேஸ்வரன் கூறுகையில், "மாநாடு முடிந்த பிறகு 3 பார்க்கிங் ஏரியா இருந்தது அதில் சென்று தொடர்ச்சியாக எங்களுடைய பேருந்தை நான் தேடினேன். ஆனால், என்னுடைய பேருந்து கிடைக்கவில்லை. பிறகு அப்படியே நடக்க ஆரம்பித்தேன்.
இதையும் படிங்க: ஓசூரில் பள்ளி மாணவியை நடுரோட்டில் வைத்து தாக்கிய பி.டி சார்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சரியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு முன்பே இருக்கும் விக்கிரவாண்டி டோல்கேட் வரை நடந்துகொண்டே சென்றேன். அதன்பிறகு, ஒரு லாரி வந்தது அவர் என்னைப் பார்த்து விசாரித்து எனக்கு லிப்ட் கொடுத்தார். அவரும் எதோ ஒரு ஞாபகத்தில் சேலத்தில் இறக்கிவிட்டார். பேருந்தில் செல்ல பணமும் கொடுத்தார்.
சேலத்தின் தலைவாசல் என்கிற பகுதியிலிருந்து பேருந்தில் நான் புறப்பட்டேன். அதன்பிறகு காசு குறைவாக இருந்த காரணத்தால் பாதியில் இறங்கினேன். பிறகு சேலத்திற்குள் மட்டுமே கிட்ட தட்ட 54 கிலோமீட்டர் நடந்தேன். நான் நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு பெரியவர் என்னைப் பார்த்து என்ன விஷயம் எதற்காக நடந்து கொண்டு இருக்கிறாய்? என விசாரித்தார்.நான் எனக்கு நடந்தவற்றை எடுத்துக் கூறினேன் அதன்பிறகு எனக்குச் சாப்பாடு, துணி வாங்கிக் கொடுத்து பஸ் ஏற்றிவிட்டார், நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன்" என தெரிவித்தார்.