சென்னை: மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கங்கபூர்வாலா 2024ம் ஆண்டு மே 23 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு, நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட நீதிபதிகளான பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா கிளேட் ஆகியோரை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கவும் குடியிரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
யார் இந்த கே.ஆர்.ஶ்ரீராம்? : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1963ம் ஆண்டு செப்.28ம் தேதி பிறந்தவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவரது முழு பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை, கணக்கியல் மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி.காம் படித்தார்.
அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து எல்எல்எம் (கடல் சட்டம்) முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கடந்த 1986ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கறிஞராக, கடந்த 1997ம் ஆண்டு முதல் கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் தனி நிபுணத்துவத்துடன் வணிக விவகாரங்களை கையாண்டு வந்துள்ளார். குறிப்பாக, துறைமுக சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு, நிறுவன சட்டம் ஆகியவற்றிலான விஷயங்களை கையாளுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தார் கே.ஆர்.ஸ்ரீராம்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். பின்னர் மூன்றே ஆண்டுகளில் 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார்.