சேலம்: பிரதமர் மோடி பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள தமிழகத்தைச் சார்ந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர்.
அதிமுக கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் நிரந்தரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேசுவார்" என்று ஓ.பன்னீர்செல்வத்தை பேச அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த அழைப்பைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "மூன்றாவது முறையாகவும் பிரதமராகி, நரேந்திர மோடி சாதனை புரிவார். இந்தியத் திருநாட்டை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் தலைசிறந்த நிர்வாகத்தை வழங்கி பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். மேலும், கடந்த காலங்களில் ஆண்டு கொண்டிருந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி தாராளமாக கிடைக்கச் செய்ததை உறுதி செய்தது பிரதமர் மோடி மட்டுமே.
ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்குவதற்கு மாநில அரசு எப்படி சிரமப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், ஒரே அரசாணையில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மட்டும்தான்" என்று கூறினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் பேச முற்பட்டபோது, கே.பி.ராமலிங்கம் குறுக்கிட்டு, "நன்றி ஐயா, பிரதமர் மோடி வந்துவிட்டார்" என்று கூறி, பேச்சை முடித்துக் கொள்ளும்படி ஓபிஎஸ்-ஐ அறிவுறுத்தினார். இதனை அடுத்து, ஓபிஎஸ் நன்றி தெரிவித்துக்கொண்டு தனது இருக்கைக்குச் சென்றார்.
இந்த நிகழ்வு, அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பாஜகவில் இணைந்துள்ள நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
அதன் ஒரு பகுதியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறது. பிரதமர் மோடி காலத்திற்கு முன்பு டெல்லியில் இருந்த லாபி தற்போது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழல்களை ஒழித்தவர் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி உலக அளவில் இந்திய விளையாட்டுத் துறையை தகுதி உள்ளதாக மாற்றி இருக்கிறார். உண்மையான வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததால் தான் இன்று விளையாட்டு அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்தான் மிகப்பெரிய சமூகத்தினரின் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வெற்றி பெறுவது உறுதி" என்று தெரிவித்தார்.
மேலும், பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு மோடி வந்ததும் அனைத்து தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறதா..?