தேனி: வீட்டுமனைப்பட்டா வழங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை இடம் தேர்வு செய்து தராத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கொட்டக்குடி மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொட்டக்குடி மலைக் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரிய மலைக் கிராம ஊராட்சிகளில் கொட்டக்குடி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மலைப்பகுதிகளில் ஏலம், காப்பி, மிளகு, தென்னை, வாழை, நெல் போன்றவை பயிரிடப்பட்டு வருகிறது.
இப்பகுதி வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்தப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, அரசு சார்பில் குடியிருப்பு நிலங்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதற்குரிய இடம் அளவீடு செய்து வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது வனத்துறையினர் வனப்பகுதிக்குச் சொந்தமான இடத்தில் வசித்து வருபவர்களை, அப்புறப்படுத்தி வரும் நிலையில், கொட்டக்குடி கிராம மக்கள் தங்களது பட்டாவுக்குரிய இடத்தை அளவீடு செய்து வழங்கக் கோரி, நேற்று தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக அந்த கிராமப் பகுதிகளிலும், போடி நகா் பகுதியிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இப்பகுதியில் முறையான போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பள்ளிகளுக்குச் செல்லும் பிள்ளைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதி மிகவும் இருட்டாக இருப்பதால் மக்கள் அச்சத்தில் வாழுகின்றனர். நாடு வளர்ச்சி பெற்று வரும் நிலையில், எந்த ஒரு முன்னேற்றமும் இங்கு ஏற்படவில்லை.
எங்களுக்கு வீட்டு வசதி என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் தான் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவோம். தாங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வர வேண்டாம். தேர்தல் வாக்குச் சாவடிக்கு வரும் வாக்குப் பெட்டி காலியாகத்தான் திரும்பிச் செல்லும். தங்கள் வாழ்ந்தும் இறந்தவர்களாக வாழ்ந்து விட்டுப் போகிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "ஏப்.19 அன்று வீட்டில் சீரியல் பார்க்காமல் விரைவாக சென்று வாக்கு செலுத்துங்கள்" - பரப்புரையின் போது அமைச்சர் அட்வைஸ்! - Lok Sabha Election