சேலம்: குழந்தைகளைக் கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவர் சேலம் அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ரோகித் என்ற மகனும், தர்ஷிகா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இவர்கள் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கோவிந்தராஜ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது, வீட்டில் இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையிலும், அவர்களுக்கு அருகில் அவரது மனைவி சங்கீதா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷ்னர் முரளி தலைமையிலான போலீசார், 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து, துணை கமிஷ்னர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்துள்ளார். இதில், இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு சங்கீதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: துபாய் சென்ற 16 நாளில் இளைஞர் மர்ம மரணம்.. கதறி அழும் குடும்பத்தார்!
மேலும், கோவிந்தராஜுக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை கோவிந்தராஜ் வேலைக்கு புறப்படும் பொழுதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோவிந்தராஜ் மனைவியை திட்டி விட்டு காவல் நிலையத்திற்குச் சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து, போலீசார் உயிரிழந்த மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரின் உயிர் இழப்பிற்கு குடும்பத்தகராறு தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நேற்று நேற்று காலை ஏன் அவர்கள் சண்டையிட்டனர் என்பது குறித்து கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, குழந்தைகள் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளதை பார்த்த கோவிந்தராஜ் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்