நீலகிரி: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், வழக்கினை விசாரணை செய்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, வழக்கை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகினார். அதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் நேரில் வந்தனர்.
இந்த வழக்கு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்டர்போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "சிபிசிஐடி போலீசார் வழக்கின் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இன்டர்போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்" தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்