திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் பகுதியில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டிற்கான மாநில சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ், சுற்றுலா மையம் அமைக்க ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில், மேல்மலை மன்னவனூர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த இடத்தில் சுற்றுலா மையம் அமைக்கக் கூடாது என்று மன்னவனூர், கவுஞ்சி மற்றும் இதைச் சுற்றியுள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக இந்த பகுதி உள்ளதாகவும், இதில் சுற்றுலா மையம் அமைத்தால் தங்களது கால்நடைகள் மேய்ச்சல் நிலம் இல்லாமல் அழிந்து போகும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அரசு தரப்பில் இருந்தும், சுற்றுலாத் துறை சார்பிலும், உள்ளாட்சி நிர்வாகிகள் சார்பிலும் பல்வேறு கட்ட சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்த போதும் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை கைவிடவில்லை.
இதை அடுத்து சுற்றுலா மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை. அத்துடன் இரண்டு ஆண்டுகள் இந்த நிதி பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால் திரும்ப அனுப்பப்பட்டு உள்ளது. இது பற்றி சுற்றுலாத் துறையினர் கூறியதாவது, "கடந்த 2021- 22 ஆம் ஆண்டிற்கான மாநில சுற்றுலா நிதியில் இருந்து மன்னவனூர் பகுதியில் சூழல் சுற்றுலா மையம் அமைப்பதற்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த பணிகளைச் செய்யப் போகும்பொழுது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. இதை அடுத்து இந்த நிதி திரும்ப அனுப்பப்பட்டு விட்டது. வேறு பிரச்சனை இல்லாத இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கூடுதல் நிதியுடன் சூழல் சுற்றுலா மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தரத் தடை - அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு!