சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆண்ட்ரோ ஆலன் (21) என்ற மாணவர், விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாணவன் ஹாலன் விடுதியில் உணவு அருந்தி விட்டு அறைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அதே கல்லூரியில் பயிலும் 5 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களான கவின் (24) மற்றும் தியானேஷ்(24) ஆகியோர், ஹாலனை அழைத்து இளைய மாணவர்களை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.
பின்னர் சக மாணவர்களை அழைத்து ஹாலன் சென்ற போது, கவினும், தியானேசும் இணைந்து இப்படிதான் மெதுவாக நடந்து செல்வாயா? வேகமாக சென்றுவா என கூறியதாக தெரிகிறது. மேலும் சீனியர் சொன்ன கேட்கமாட்டாயா? எதிர்த்து பேசுறியா? என கேட்டு கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரம்: கல்லூரி முதல்வர் லியோ ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்!
இதில், ஆத்திரமடைந்த மாணவன் ஹாலன் இருவரையும் கையால் தள்ளியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் கவின், தியானேஷ் இருவரும் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஹாலன் தலையில் அடித்தாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஹாலன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர், தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசார் மாணவர்கள் விடுதிக்கு சென்று விசாரணை நடத்த முயன்றனர். அப்போது கல்லூரி தரப்பில் விசாரணை செய்து விட்டு பின்னர் கூறுகிறோம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தகவல் அறிந்து நெய்வேலியில் இருந்து புறப்பட்டு வந்து புகார் அளித்துள்ளார்.
5 பேர் கொண்ட குழு: இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 5 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ கூறும்போது, "முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் கவின் மற்றும் தியானேஷ் ஆகிய இருவரையும் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளோம். மேலும் இது குறித்த தகவல்கள் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதியை விட்டும் மருத்துவமனையை விட்டும் அனுப்பி வைக்கப்படுவார்கள். விசாரணை முடிந்த பின்னர் இறுதிக்கட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.