சென்னை: மைசூரில் இருந்து தர்பாங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் (Bagmati Express Train - 12578), நேற்றிரவு திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் (Kavaraipettai) நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டு ஏசி பெட்டிகளில் தீ விபத்தும் ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ரயில்வே காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் துரித நடவடிக்கையால் காயமடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேசான காயங்களுடன் 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதித்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ விசாரணை:
இந்த விபத்து குறித்து ரயில்வே துறை தனியாக விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி பகுதியில் ரயில் தண்டவாளங்களின் ஓரங்களில் இருந்த கம்பிகள் கழற்றப்பட்டு கிடந்தன. மேலும், சிக்னல் பலகைகளில் உள்ள கொக்கிகள் கழற்றப்பட்டிருந்தன.
ஆனால், அவை உரிய நேரத்தில் ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன. அப்போதே இது சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இப்போது கவரைப்பேட்டை ரயில் விபத்தும் சதி வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்தில் தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தடம் மாறிய ரயில்?
இந்த ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் ரயில்வே தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் சூர்யபிரகாசம், ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் ஈடிவி பாரத் தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினர்.
அதில், "பிரதான தடத்தில் செல்வதற்குத்தான் பச்சை விளக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதான பாதையில் இருந்து லூப் பாதைக்கு மாறியதால் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது," என்று இருவரும் தெரிவித்தனர்.
கட்டமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம்:
மேலும், ஏற்கனவே சிக்னல் கட்டமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு, ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பராமரிப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியிருந்தோம் என்பதை சுட்டிக்காட்டினர்.
மனோகரன் பேசுகையில், "இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன. ரயில் நிலையங்களை அழகுபடுத்துவது, ரயில் சேவைகளை வசதியாக மாற்றுவது போன்ற பணிகளில் அரசு அதிக நிதி செலவழிக்கிறது. ஆனால், ரயில் தடங்கள், பாலங்கள், விளக்குகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு பணிகளுக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. இதுவே தொடர்ந்து விபத்துகளுக்குக் காரணமாக உள்ளது," என்றார்.
ஊழியர்களுக்கு சம்மன்:
இதற்கிடையில், விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார். கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர் உள்பட பதிமூன்று பேருக்கு உரிய விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கவாச் தொழில்நுட்பம்:
நம்மிடம் தொடர்ந்து பேசிய மனோகரன், "ஐரோப்பிய சிக்னல் அமைப்பின் மாதிரியான 'கவாச்' தொழில்நுட்பம் மிக முக்கியமானது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் முழுமையாக செயல்படுத்தவில்லை. 1465 கி.மீ தூரத்தில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளது. இதை 6000 கி.மீ தூரத்திற்கு விரிவாக்க வேண்டும். ஆனால், 1000 கோடி ருபாய் கூட இன்னமும் கவாச்சி தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தவில்லை."
"இது போன்ற விபத்துகள் தொடர்கதையாவதற்கு ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஏற்பட்ட அலட்சியமே முக்கிய காரணமாகும். ஒடிசாவில் ஏற்பட்ட விபத்தில் ரயில்கள் ஒரே தடத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். அதேபோல், தான் இந்த விபத்தும் ஏற்பட்டது. ஆனால், வேகம் குறைவாக ரயிலை இயக்கியதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர் திறமையாக செயல்பட்டு வேகத்தை குறைத்ததே இதற்குக் காரணம்," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க |
புதிய அமைப்பு: சாதகமா? பாதகமா?
"2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரயில்வேயின் அமைப்பு முறை மாற்றப்பட்டு, இந்திய ரயில்வே மேலாண்மை அமைப்பு (Indian Railway Management System) என்ற புதிய அங்கம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், ரயில்வேயில் தனித்தனியாக இருந்த பல்வேறு வேலைகள் ஒன்றுபடுத்தப்பட்டன. இது, கவனக் குறைவுக்கு வழிவகுத்ததாகக் கருதப்படுகிறது. எனவே, மீண்டும் பழைய அமைப்பு முறைக்கே செல்ல ரயில்வே முடிவெடுத்து வருகிறது," என்றார் சூர்யபிரகாசம்.
மனோகரன் பேசும்போது, "இந்த விபத்தில் மனிதத் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஓட்டுநர் தவறு செய்வதற்கும் வாய்ப்புகள் இல்லை. பச்சை விளக்கு எரிந்ததால் தான் அவர் அந்தத் தடத்தில் சென்றுள்ளார்.
விபத்து நடந்த போதிலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக மீட்கப்பட்டனர். இதற்கு, ஜெர்மன் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளும் ஒரு காரணம். விபத்து ஏற்பட்டாலும், பயணிகளுக்குக் கடுமையான காயங்கள் ஏற்படாத வகையில் இந்தப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன," என்று கூறினார்.
பணியாளர்கள் தட்டுப்பாடு:
இந்திய ரயில்வே துறையில் பாதுகாப்புப் பிரிவில் மட்டும் சுமார் 1.25 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். உடனடியாக அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குத் தேவையான நிதியைச் சரியாக ஒதுக்க வேண்டும் எனவும் இருவரும் கூறினர். மேலும், வேலைகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் ஓய்வு, ரயில் கிராசிங் பகுதியில் பாதுகாப்பை மேம்பாடு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பாக்மதி ரயில் விபத்தைத் தொடர்ந்து, 2 இருப்புபாதை மார்க்கத்திலும் ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இயங்கவுள்ள 18 ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும், சில ரயில்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.