கரூர்: தமிழக பெண் காவலர்கள் குறித்து பிரபல யூடியூப் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை, கடந்த மே 4ஆம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சவுக்கு சங்கரின் கோரிக்கையை ஏற்று, கோவையில் உள்ள மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் அளித்த புகார், தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகார் என சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 6ஆம் தேதி தொழிலதிபர் கிருஷ்ணன் என்பவர், சவுக்கு இணையதளத்தில் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், பிரியாணி கடையை யூடியூப் சேனலில் பிரபலப்படுத்துவதற்காக 7 லட்சம் ரூபாய் பணம் பெற்று விட்டு ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கரிடம் ஏழு லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், சவுக்கு சங்கர் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11.15 மணிக்கு சவுக்கு சங்கரை கரூர் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும், 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.
இந்த மனு மீதான விசாரணை மதியம் 2 மணியளவில் வந்தது. அப்போது, 4 நாட்கள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதனை அடுத்து சவுக்கு சங்கர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டம்; அறிக்கை அளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!