புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவு 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சரின் அற்புதமான திட்டங்களே காரணமாகும் என பேசினார். இந்நிகழ்வின் போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராம சுப்புராம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்துள்ளார். இது முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னைப் பொறுத்தவரையில் சரியானது அல்ல.
ஒரு முதலமைச்சருக்கோ, பிரதமருக்கோ முழு அதிகாரம் உண்டு, யாரை வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம். அமைச்சரவை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையாக ஜனநாயகத்தில் உள்ள நிகழ்வுதான். இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்து தான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது.
இதையும் படிங்க: "ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் தலைவர்களின் ஆட்சி நடக்கிறது" - செல்வப்பெருந்தகை பெருமிதம்!
கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால், அதனை கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் விமர்சனம் செய்வது என்னைப் பொறுத்தவரையில் உகந்ததாக இருக்காது. செந்தில் பாலாஜியின் வழக்குக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவரை 470 நாட்கள் சிறையில் வைத்திருந்தது தவறு.
அமலாக்கத்துறையினர் ஆதாரம் இருந்தால் உடனடியாக வழக்கை நடத்தி தீர்ப்பு பெற்று கொடுத்திருக்க வேண்டும், வழக்கு தொடங்குவதற்கு முன்பே அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், வழக்கின் விசாரணைக்கு முன்பே கைது என்பதை தவிர்க்க வேண்டும். படிப்படியாக உச்ச நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்பது எந்த விதமான தடையும் கிடையாது, தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்க முடியாது. அப்படி வழக்கு போட்டவர்கள் எல்லாம் அமைச்சராக முடியாது என்றால், பாஜக நினைத்தால் எல்லோர் மீதும் வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும்.
காங்கிரஸ் கட்சி திமுகவோடு தோளோடு தோள் நிற்கும் என்று செல்வப்பெருந்தகை நேற்று கூறியிருப்பது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை வலியுறுத்தி சொல்கிறார். தேர்தல் பத்திர முறைகேடு சம்பவத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் தீர விசாரிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் பணத்திற்காக அமலாக்கத்துறை மூலம் மிரட்டி எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை விசாரித்து வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும்" என தெரிவித்தார்.