வேலூர்: தமிழ்நாட்டில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதில், வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். தற்போது பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
யார் இந்த கார்த்தியாயினி? வேலூர் மாநகராட்சி மேயராக 2011-இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.
அப்போது இவர் செயல்பட்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. மேயரின் செயல், சட்டத்திற்குப் புறம்பான செயல், நீதித்துறையைக் களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தை கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் தன்னுடைய செல்வாக்கு குறைந்ததாகக் கருதி, கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதன் பின்னர், 2020ஆம் ஆண்டு மாநில செயலாளர் பதவியைப் பெற்றார். தற்போது பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி: குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்பியாக திருமாவளவன் உள்ளார்.
இந்த தொகுதி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 6 முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர்களை எதிர்த்து கார்த்தியாயினியை களமிறக்கியுள்ளது, பாஜக. இதனால் இந்த தொகுதியில் மும்முனைப் போட்டி நிகழ்கிறது.
இதையும் படிங்க: மாஸ்கோவில் இசை விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல்..! 40 பேர் பலி..145 பேர் வரை படுகாயம் - ரஷ்யாவில் என்ன நடந்தது?