கன்னியாகுமரி: ஈத்தாமொழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், கார் அடியில் சிக்கிய பள்ளி மாணவனை, கார் இழுத்துச் சென்றுள்ளது. மேலும் கார் தீப்பிடித்ததால், காரில் சிக்கிய மாணவன் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இது குறித்து, சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் துரதிஷ்டவசமாக இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் தீயில் கருகி உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மற்றும் சுசீந்திரம் போலீசார், காரில் சிக்கி உயிரிழந்த சிறுவன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அடுத்த ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கார் ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், கன்னியாகுமரி, ஈத்தாமொழியை தெற்குபால் கிணற்றான் விளையைச் சேர்ந்தவர் கோபி (39). ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரியில் பெயிண்ட் கடை நடத்தி வரும் இவர், நேற்று விடுமுறை என்பதால் மனைவி லேகா (30) மற்றும் குழந்தைகளுடன் சங்குதுறை கடற்கரைக்கு புறப்பட்டுள்ளனர்.
கார் ஈத்தாமொழி செம்பொன்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், காரின் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் இருசக்கர வாகனமும், அதை ஓட்டி வந்த சிறுவனும் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து, காரின் முன்பகுதியில் சிறுவனும், இருசக்கர வாகனமும் சிக்கியிருப்பதை அறியாத கோபி காரை வேகமாக ஓட்டியுள்ளார்.
இதனை நேரில் பார்த்த பொதுமக்கள் காரை நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டுள்ளனர். மேலும், காரை நிறுத்துமாறு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின் தொடர்ந்துள்ளனர். ஆனால், அதற்குள் 2 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கார் சங்குத்துறை கடற்கரை சாலைக்கு வந்த நிலையில், காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பதறிய கோபி மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் காரில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.
இதற்கிடையே கார் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதில், காரின் முன் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சிறுவனின் உடல் சிக்கியிருந்த நிலையில், கார் தீப்பிடித்ததால் சிறுவன் உடல் முழுவதும் நெருப்பில் கருகியது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் தெற்கு சூரங்குடி பள்ளித் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் (15) என்பதும், சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இவ்விபத்து தொடர்பாக போலீசார் காரை ஓட்டி வந்த கோபியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது சிறுவன் கார் மோதி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, கொடூரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹிமாச்சலில் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி..! இன்று சென்னையில் உடல் தகனம்..முழு விபரம்..