கன்னியாகுமரி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக கட்சித் தலைமையால், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பசிலியான் நசரேத் இன்று (மார்ச் 26) நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எனக் கூறுவதற்குப் பதிலாக, புரட்சித்தலைவி எம்ஜிஆர் என பேட்டியைத் தொடங்கியது, அங்குள்ள அதிமுகவினர் இடையே வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "ஜெயலலிதா ஆட்சியிலும், எம்ஜிஆர் ஆட்சியிலும் தான் பல திட்டங்கள் வந்தது. பாஜக அரசு வெறுப்பு அரசியலை பேசியே வளர்ந்து வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை. பத்து ஆண்டுகளாக மோடி பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் புறக்கணித்து வருகிறார்” என்று பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவும், அதிமுகவும் தான் ஒரே மாதிரியான கொள்கையுடன் மக்களைச் சீரழித்து வருகின்றனர்" என்று பாஜக, திமுக என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக பாஜக, அதிமுக என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது முதல் துண்டுச் சீட்டை பார்த்துப் படிக்க ஆரம்பித்த அவருடைய செயல், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு!