தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அருகே உள்ள பூங்காவில், மாணவர்கள் படிப்பதற்கு பயன்பெறும் வகையில் 'படிப்பக வளாகத்தை' திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று (மார்ச் 16) திறந்து வைத்தார்.
பின்னர், கனிமொழி எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுக - காங்கிரஸ் கட்சிகள் துடைத்தெறியப்படும் என கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “இது குறித்து நான் பலமுறை சொல்லிவிட்டேன். திமுகவை இல்லாமல் செய்திடுவோம் என கூறிய பல பேர், இன்றைக்கு எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. இது போன்ற பலரை நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
அதனால் இதை எல்லாம் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடையாது” என்றார். தொடர்ந்து அவரிடம், பிரதமர் தமிழகத்திற்கு தொடர்ந்து வருவதால் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றார் என கேட்டதற்கு, “தேர்தல் நேரத்தில் திரும்ப திரும்ப பிரதமர் தமிழகத்திற்கு வந்தால், அப்படியாவது யாராவது ஓட்டு போடுவார்கள் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் வாக்கு வங்கி அதிகரிக்கிறது என்று சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமருக்கு தமிழ் மொழி மேல் பற்றும், தமிழில் பேச ஆசையாக இருக்கிறது குறித்த கேள்விக்கு, “ரொம்ப மகிழ்ச்சி, கத்துக்கட்டும். நம்மளத்தான் இந்தி மொழி கற்க சொல்கிறார்கள். எனக்கு தெரிஞ்சு, வட இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்கள் எந்த தலைவர்களும் தமிழ் பேசுவதாக இல்லை.
தமிழ் தாய்மொழியாக இல்லாதவர்கள், ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அதுதான் உண்மையான சமூக ஒருமைப்பாடாக இருக்கும். தமிழ் மொழியை கற்றுவிட்டு, நல்ல தமிழில் பேசினால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் விவகாரம்; பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்திற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!