சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்கவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (பிப்.21) கொண்டாடப்பட்டது. இதனை கமல்ஹாசன் கொடி ஏற்றி வைத்து தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த ஏழு ஆண்டுகள் எப்படி கடந்தது என்பதே தெரியவில்லை. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன். அல்ல சோகத்தில் வந்தவன். இத்தனை ஆண்டுகளாக மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? என்று வந்த கோபம் அது.
என்னிடம் பலரும், எனது கட்சியினரும் கூட ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் ஏன் சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று கேட்கிறார்கள். இங்கு முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? முழுநேர அரசியல்வாதி யாரும் இல்லை. முழுநேர கணவரும் இல்லை, முழுநேர மனைவியும் இல்லை, முழுநேரப் பிள்ளையும் இல்லை.
விஜயின் அரசியலுக்கு முதல் குரல் என்னுடையது: விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முதல் குரல் என்னுடையதுதான். அவர், சினிமாவை விடுகிறேன் என்றால், அது அவருடைய பாணி. என்னுடைய பாணி வேறு என்று தெரிவித்தார்.
கோவையில் தோற்றது நானில்லை; ஜனநாயகம்: மேலும் பேசிய அவர், 'நான் திருடிய பணத்தில் கட்சி நடத்தவில்லை. என்னுடைய சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறேன். நான் கோவை தெற்கு தொகுதியில் 1,728 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக சொல்கிறார்கள். அங்கு நான் தோற்கவில்லை. ஜனநாயகம் தோல்வியடைந்தது. ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டு வாக்கு செலுத்தும் வரையில் இந்த நிலைதான் ஏற்படும்.
என்னை அரசியலைவிட்டுப் போக வைப்பது கடினம்: அதற்கு கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணம். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. தேர்தல் நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் மாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் 40% பேர் வாக்கு செலுத்துவதில்லை. இந்நிலை மாறவேண்டும். என்னை அரசியலுக்கு வரவைப்பது கஷ்டம் என்றார்கள். போக வைப்பது அதை விட கஷ்டம். மக்களிடம் இருந்து திருடுவதற்கு நான் வரவில்லை. என்னுடைய அரசியல் ஆரம்பித்து விட்டது. அழுத்தமாக பயணித்து கொண்டிருப்பேன்.
கொள்ளைக் கூட்டத்தை மாற்றவே வந்துள்ளோம்: சக அரசியல் வாதிகள் என்பவர்கள் அரசியல் வாதிகள் அல்ல வியாபாரிகள்; என்னுடைய எஞ்சிய வாழ்நாளை உங்களுக்கு கொடுக்கிறேன். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை மாற்றுவதற்காக வந்தவர்கள் நாங்கள். முதலில் தேசம், இரண்டாவது தமிழ்நாடு, மூன்றாவது மொழி. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மாநில அரசு செய்ததை ஒன்றிய அரசு செய்யவில்லை' எனக் குற்றம்சாட்டினார்.
எனக்கு கட்சியினால் நஷ்டமே: தொடர்ந்து பேசிய அவர், 'டெல்லியில் ஆணி படுக்கை போட்டு உள்ளார்கள். நான் எனக்காக பாடுபடவில்லை. இந்த கட்சி ஆரம்பித்ததால் எனக்கு நஷ்டம்தான். இந்தியாவின் அதிக வருமானம் தமிழ்நாட்டில் தான். ஆனால், நாம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு, 29 பைசா வருகிறது.
பாஜக மீது குற்றச்சாட்டு: தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு தர மறுக்கிறது. நம்மை விட பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய பாஜக அரசு வழங்குகிறது. பீகாரில் இருப்பவர்கள் எனக்கு தம்பிதான். அனைவருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும்.
குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் நாம் செய்ய வேண்டியது: குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் நாம் நேர்மையை கடைப்பிடித்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதியை கணக்கிடுவது என்பது சரியாகும்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணி: தேர்தலில் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு ஒட்டுப் போடுகிறார்கள். அதனால், ரூ.50 லட்சம் இழப்பீடு ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு இயங்கும் கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும்' என்று குறிப்பிட்டார்.
அதோடு, மக்களவைத் தேர்தலுக்கானக் கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது என்றும் மநீம கட்சியை மதித்து 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கிய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த அவர், தேர்தல் பத்திரங்கள் மூலம் மநீம கட்சி எந்த நிதியும் பெறவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகை திரிஷா குறித்து அவதூறு - நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்! ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பு!