கடலூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சார பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சிதம்பரம் மற்றும் பி. முட்லூரில் பிரச்சாரம் செய்தார்.
நடிகர் கமல்ஹாசனுடன் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளருமான திருமாவளவன் திறந்த வேனில் நின்று ஆதரவு திரட்டினார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, “எல்லோரும் இங்கு வந்திருப்பது அவசர நிலையை கருத்தில் கொண்டுதான். எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத்தான்.
இது தியாகம் அல்ல; வியூகம்: மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், அம்பேத்காரிஸ்ட் என எல்லா ஸ்டுகளும் தேசத்திற்கு பாதுகாப்பின்மை வரும்போது தோளோடு தோள் நிற்க வேண்டும். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இன்று திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கின்றேன். இந்த முறை அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து விட்டால் ஜனநாயகமே இருக்காது என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். இதனால் தான் நாங்கள் களம் கண்டுள்ளோம்.
எனது கட்சிக்காரர்கள் தியாகம் பண்ணிட்டீங்க என்று கேட்கிறார்கள். இது தியாகம் அல்ல. வியூகம். களம் காண வேண்டிய தேவைக்காக அவரும் வந்திருக்கிறார். நானும் வந்திருக்கிறேன். நல்லவேளை அரசியலுக்கு 25 வருடங்களுக்கு முன்னாலே அவர் வந்திருக்கிறார். அன்று வந்த திருமாவளவனுக்காக இன்று தாமதமாக நன்றி சொல்கிறேன். திருமாவளவனின் 60 வயதில் திருமாமணி என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் எனது வாழ்த்தும் இடம்பெற்று இருந்தது.
வாழ்விலும், சினிமாவிலும் சாதிக்கு இடமில்லை: அதில் நான் தன்னிகரில்லா தமிழர் என்று தலைப்பை கொடுத்திருந்தேன். பெருஞ்சிறுத்தை திருமாவளவன். இவரது ஆற்றல் மிக்க பேச்சும், ஞானமும் என்னை கவர்ந்திருக்கிறது. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என் எதிரி யார் என முடிவு செய்து கொண்டு விட்டேன். சாதியம் தான் என் எதிரி. எனது வாழ்வில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களுக்கும் இடமில்லை. பிறகு ஏன் சினிமாவிற்கு சாதிப்பெயர் வைக்கிறீர்கள் என கேட்பார்கள். அதற்கு இது பதில் அல்ல. விளக்கம்.
மீனவர்களை காக்கத்தவறிய அரசு: ஆல்கஹாலின் தாக்கத்தைப் பற்றி ஒரு படம் எடுக்க நினைத்தால், அதன் கதாநாயகன் குடிப்பவராகத்தான் இருப்பார். அதுபோலத்தான் சாதி வெறியை மையப்படுத்தி படத்தை எடுத்தால் அதில் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அது சாதியை உயர்த்தி பிடிப்பதாக ஆகாது. சாதியே இல்லை என்கிறீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் என்று கேட்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் அடிமட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்த கணக்கெடுப்பு.
1921இல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியபோது சர்வாதிகாரிகள் பதறிப் போனார்கள். அதற்குப் பிறகு 1979-இல் மண்டல் கமிஷன் கூறியபோது அவர்கள் பெரும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அதை வி.பி. சிங் அறிமுகப்படுத்தியபோது பாஜக செய்த ரகளையை யாரும் மறக்கவில்லை. பின்னர், அதற்கு சமரசம் செய்யும் வகையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என கணக்கெடுப்பு கூறினார்கள். தமிழ்நாடு மீனவர்களை காக்கத்தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.
ஒன்றுமே செய்யவில்லை இந்த ஒன்றிய அரசு: 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவிற்கு கடலோடிகள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும், பின்னர் ஏலம் விடப்படுவதும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டு காலமாக பகையும், உறவும் மாறி மாறி இருந்திருக்கிறது. அந்த சரித்திரம் படித்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் தெரியும். நீங்கள் புதிய சரித்திர கதைகளை கூறாதீர்கள்.
ஒன்றுமே செய்யவில்லை இந்த ஒன்றிய அரசு என்பதுதான் உண்மை. விவசாயிகளின் துயரம் சொல்லித் தெரியவில்லை. இப்போது பத்திரிகைகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். இருந்தாலும் அடக்க முடியாமல் வெளியில் வருகிறது. அவர்கள் நியாயம் கேட்டார்கள். விவசாயிகள் போராடினார்கள். அப்போது சில வாக்குறுதிகளை தந்தார்கள். ஆதரவு விலை தருகிறோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்டவர்களுக்கு விடுதலை தருகிறோம்.
விவசாயிகளுக்கு ஆணி படுக்கை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்மைகள் செய்கிறோம் என்று சொன்னார்கள். செய்தார்களா? ஆனால் செய்யவில்லையே என்று மீண்டும் போராடப் போன விவசாயிகளுக்கு டிரோன் மூலம் கண்ணீர் புகை வீசினார்கள். ஆணி படுக்கையை விவசாயிகளுக்கு கொடுத்தார்கள். சோப்பு, சீப்பு, கண்ணாடிக்கெல்லாம் ஆதரவு விலை நிர்ணயிக்கிறீர்கள். ஆனால் விவசாயப் பொருளுக்கு நிர்ணயிக்க வில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருகிறேன் என கூறினார்கள்.
இங்கு எத்தனையோ பேர் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். வேலை செய்பவர்களும், அவர்களாக தேடிக் கொண்டார்கள். மத்திய அரசின் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை கொடுத்தாலே ஓரளவு குறையும். அதற்கு மாறாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் மக்களின் சொத்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் எல்லாமே நீ, வா, போ என்று வருகிறது.
வழிக்கு கொண்டு வர ஈடி: அதற்கு நான் என்ன செய்வது. (அப்போது திருமாவளவன் மைக்கை வாங்கி அதானி, அம்பானி என்று சொன்னார்) அதன் பிறகு தேர்தல் பத்திர மோசடி. அது பத்திரமாக இருக்கிறது என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கக் கூடாது. சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாக பணத்தை பறிக்கும் செயல். மரத்தை குத்தகை எடுத்து ஏறி உட்கார்ந்து பறிக்கிறார்கள். அப்போது கீழே விழுந்த ஒன்றிரண்டு பழத்தின் மண்ணை ஊதி மற்றவர்களுக்கும் கிடைக்கிறது.
மற்றவர்கள் வாங்கவில்லையா? என்று கேட்கலாம். வாங்குவதை சட்டமாக்கியவர்கள் அவர்கள். ஆயிரம் கோடி கொடுக்கிறார்களே. எந்த முதலாளியாவது ஆதாயம் இல்லாமல் கொடுப்பாரா? ஒரு 1 போட்டால் 9 ரூபாய் எடுக்க வேண்டும் என்பது தானே வியாபாரியின் குணம். அவர்கள் ஆதாயம் பெற்றவர்கள். சிலரை வழிக்கு கொண்டு வர அமலாக்கத்துறை, வருவாய்த்துறை போன்றவற்றை அனுப்புகிறார்கள். சில கம்பெனிகள் தங்களின் வருவாயை விட அதிகமாக நிதி கொடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் அகற்றப்பட வேண்டும்: அந்த பணத்திற்கு என்ன வண்ணம். அதுதான் கருப்பு பணம். இதை ஒழிக்கிறேன் என்று சொன்னார்கள். முதலையைப் பிடிக்க குளத்து தண்ணியை எடுக்கிறேன் என்று கூறினார்கள். முதலை வெளியே சென்று விட்டது. ஆனால் மீன்கள் செத்து விட்டது. ஒன்றிய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரான அரசு. சிறுபான்மையினரை அச்சத்தில் வாழ வைக்கின்ற அரசு. மீனவர்களை பாதுகாக்க தவறியது, விவசாயிகளுக்கு துரோகம் செய்வது ஒன்றிய அரசு. பெண்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாத அரசு ஒன்றிய அரசு.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலை இல்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று சொன்னால் கோபம் வருகிறது. அதனால் மாற்றி சொல்கிறேன். இது ஒன்றிய அரசு அல்ல. மக்களோடு ஒன்றாத அரசு. இந்த ஆட்சிக்கு அடுத்த வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அடுத்த வாய்ப்பு அல்ல. இவர்கள் அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் குரலாக உங்கள் குரலாக இன்று ஸ்டாலின் திகழ்கிறார். இளைஞர்களின் குரலாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார்.
அரசியல் சமையலுக்கு உகந்த பானை: குரலற்றவர்களின் குரலாக திருமாவளவன் திகழ்கிறார். 2009இல் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஆனால் 2019-ல் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது. அப்போது அவர்கள் கையில் டிஜிட்டல் பானை இருந்தது. நம் கையில் மண் பானைதான் இருந்தது. எனக்கு பேராசை பிடிக்கும். இந்த தொகுதியில் திருமாவளவன் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.
சிதம்பரத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டும். திருமாவளவன் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவர். இது வாக்குறுதி அல்ல. நான் பார்த்த சாட்சி. அரசியலுக்கு, அரசியல் சமையலுக்கு உகந்த பானை. சமத்துவத்திற்கு உகந்த பானை. இதில் உங்கள் அரசியல் சமையல் பொங்கட்டும்” என பேசினார்.
இதையும் படிங்க: வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இது தான் நடந்தது - ரகசியத்தைப் போட்டு உடைத்த அன்புமணி! - Lok Sabha Elections 2024